Monday, 2 October 2017

ஸ்பைடர் (Spyder)



                    தமிழ் சினிமாவின் வெற்றி இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும், டோலிவுட் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ளது ஸ்பைடர். இந்த படத்திற்க்கு ஏன் ஒன்றரை வருடங்களை வீணடித்தார்கள் என தெரியவில்லை. படத்தில் எந்த இடத்திலும் வலுவான காட்சியை பார்க்க முடியவில்லை. இத்தகைய சாதாரண கதைக்கு திரைக்கதை எழுதி இரண்டரை மணி நேரம் படத்தை தரமுடியுமேயானல் கண்டிப்பாக முருகதாஸ்க்கு நிகர் அவரே. இவரின் மற்ற படங்களுடன் ஒப்பிடுகையில் மிக தூரத்தில் நிற்கிறது இந்த ஸ்பைடர். படமே லாஜிக் இல்லாமல் இருப்பதால் படத்தில் லாஜிக், ஹிரோயிஸம், ரோமான்ஸ் மற்றும் காமெடி இதில் ஏதேனும் ஒன்றை எதிர்பார்த்தாலும்  கண்டிப்பாக ஏமாற்றமே மிஞ்சும். முதல் முப்பது நிமிட படம் ரசிகர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துவிடும் அதை தாண்டிவிட்டால் போதும் சுடலை(எஸ்.ஜே.சூர்யா)யின் வில்லனிசம் படத்தினுள் இழுத்துவிடுகிறது. சூர்யாவின் வில்லன் பாத்திரத்தை மட்டும் அழகாக தந்திருக்கிறார் ஏ.ஆர்.எம். ஹீரோ உடனான காட்சியிலும், கொலை செய்துவிட்டு உறவினர்களின் அழுகையை ரசிக்கும் காட்சியிலும் பின்னியிருக்கிறார் சூர்யா. மற்ற வில்லன்களைப் போல ஹீரோயினை கடத்தி சென்று ஐ லவ் யூ சொல்ல வைப்பதும், ஹீரோவையும் அவரது குடும்பத்தையும் பழிக்கு பழி வாங்குவதெல்லாம் இல்லாமல் இவரின் புதுமையான வில்லனிசத்தை இரண்டு மூன்று வருடங்களுக்கு தமிழ் சினிமாவில் காட்டினால் ரசித்துத் தீர்த்துவிடலாம்.


ரசித்தவை:

படத்தில் ரசித்தவை சில காட்சிகள் தான் அதிலும் சூர்யாவின் புதுமையான வில்லன் பாத்திரம் என்பதால் மட்டுமே.

1. சுடலையின் ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் நடித்த சிறுவனின் நடிப்பு. கொலை செய்து சடலத்தைச் சுற்றி உறவினர்கள் அழுவதை ரசிக்கும் காட்சிகளில் அவ்வளவு எதார்த்தம். ரசிகர்களை மிரள செய்கிறது.

2. இடைவேளைக்கு முன் எஸ்.ஜே.சூர்யா அழுபவர்களை பார்த்து ரசிக்கும் காட்சியும், அதைத் தொடர்ந்து தன் தம்பி சாவதைப் பார்த்து அழுது கண்ணீரை ஊதூம் காட்சியும் அப்லாஸ் ரகம்.

3. இரும்புக் கம்பியால் மகேஷ்பாபு பைக் சக்கரத்தை தாக்கும் காட்சி மற்றும் மருதமலை மாமணியே பாடல் பிண்ணனியோடு பெண்கள் உதவியால் சூர்யாவை பிடிக்கும் காட்சி எல்லாம் ரசிக்கும் ரகம்.

வெறுத்தவை:

மேலே குறிப்பிட்ட காட்சிகளை தவிர மத்தவையெல்லாமே வெறுக்கும் ரகம். குறிப்பாக காதல் காட்சிகளும், மகேஷ் பாபுவின் முகபாவனைகளும் சொதப்பல்களின் உச்சம்.


                    தமிழ் ரசிகர்கள் கண்டிப்பாக எஸ்.ஜே.சூர்யாவிற்காக ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்.

- பாஸ்கி.

No comments: