அன்பு உள்ளங்களுக்கு,
இந்த வாரம் வெளியான படங்களில் இந்திய சினிமாவில் புதிய முயற்சி என்று பேசப்பட்ட பீச்சாங்கை படத்தை பார்க்க வேண்டுமென ஆர்வத்தில் இருந்தேன். வலைதளங்களில் தோழர்கள், தோழிகளின் கூச்சல் இல்லையில்லை அவர்களின் விமர்சனங்கள் என்னை மரகத நாணயம் படத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டியது. கோலிவுட் இன்னும் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஆவி கதைகளை கைவிடப்போவதில்லை என்பது உறுதி. படத்தின் ஆரம்பமே அசத்தல் (டைட்டில் கார்டில் வரும் பழங்கால கதை), ஆம் ஆரம்பம் அசத்தல் தான் அதற்கு பின் வரும் முப்பது நிமிட கதை சாட்சாத் தமிழ் சினிமாவில் வரும் பாரம்பரியமிக்க அதே காதல் காட்சி தான். 132 பேரை கொன்ற மரகத நாணயத்தை எடுக்க ஊரே நடுங்கினாலும் நம்ம ஹீரோ தைரியமாக களமிறங்குவதே கதை. இத்தகைய கதைகளத்தை தமிழ் சினிமா முப்பது நாற்பதுகளிலேயே ஆரம்பித்திருந்தாலும் இன்றைய காலத்திற்க்கு ஏற்ப திரைக்கதையில் காமெடி கலந்து சொன்ன விதமே சிறப்பு. எல்லாம் ஒகே பாஸ் முதல் முப்பது நிமிஷம் சுமார் ரகம்னு சொல்லிட்டிங்க முப்பது நிமிடங்களுக்கு பிறகு என்ன ஆச்சு?
காலம் தாழ்த்தாமல் விமர்சனத்திற்க்குள் நுழைந்துவிடுகிறேன். இதுதான் எதிர்கால எழுத்திற்க்கு நல்லதும் கூட, சரியாக கணிக்க முடியவில்லை என்றாலும் தோராயமாக ஒரு முப்பது நிமிடங்களுக்கு பிறகு படம் சுடுபிடிக்க ஆரம்பிக்கிறது. ஹீரோவிடம் அடி வாங்கியோ இல்லை ஹீரோவை கலாய்த்தோ சிரிக்க வைக்கும் காட்சிக்கு இடமேயில்லை கதையோடு நகரும் காட்சியில் இவ்வளவு இயற்கையாக நகைச்சுவை திணிக்கப்பட்டுள்ளது. படத்தில் காமெடிக்காக நிறைய மெனக்கெட்டிருப்பதும், இதற்காக ஒரு பெரிய குழுவை திட்டமிட்டு அமைத்திருப்பதும் தெரிகிறது. ராமதாஸ் (பல பேருக்கு முனிஸ்காந்த்) காமெடியை முண்டாசுபட்டி, மாநகரம் படத்திற்க்கு பிறகு மிகவும் ரசித்து சிரித்தேன். வடிவேலுக்கு பிறகு வெறும் முகத்தை மட்டுமே பார்த்து சிரிக்க வைக்கிறது இவரின் முகபாவனை. ஆனந்தராஜின் காமெடி கலந்த வில்லனிசம் ( குறிப்பாக பாட்டியிடம் ரேடியோவில் பேசுவது) படத்தில் அதிகம் ரசிக்கப்பட்டவை. அருண் காமராஜ் இப்படியே போனால் தயாரிப்பாளர்கள் கால்சீட்டிற்காக வாசலில் நிற்க்கும் காலம் வெகுதூரமில்லை(நீண்ட நாட்களுக்குப் பிறகு பொனதின்னியை ஞாபக படுத்தியி்ருக்கிறார்).
நிக்கி கல்ராணி, பிரியாணிக்கு லெக் பீஸ் எப்படியோ அப்படித்தான் மரகத நாணயத்திற்க்கு இந்த ராணி (அவ்வளவு முக்கியமான பாத்திரம்). பாலில் விழுந்த ஸ்ட்ராபொ்ரி போல ஒரு அழகு இதற்கு மேல் என்ன சொல்ல, முதல் காட்சியில் சாஃப்டாக அறிமுகமாகி அடுத்தடுத்த காட்சிகளில் மெட்ராஸ் பாசையில் எட்டு போட்டு மிரட்டுது அம்மணி. பக்கத்தில் அமர்ந்திருந்த காலேஜ் குருப்பின் சத்தத்தை வைத்து தான் அம்மணிக்கு இவ்வளவு ரசிகர்கள் உண்டு என்பதை உணர்ந்தேன்.
குடும்பத்தோடு சிரிக்கலாம் 100 சதவிதம் சிரிப்பு உத்திரவாதம்.
- பாஸ்கி.



No comments:
Post a Comment