பொதுவாகவே இயக்குனர் ராமின் படைப்புகளில் காட்சித் திணிப்பு மற்றும் ஒரு மன சமநிலையற்ற பாத்திரங்கள் இருக்கும் என தெரிந்தும் அந்த படைப்புகளை முழு மனதோடு எந்தவித வெறுப்பும் இல்லாமல் ரசிக்கும் ரசிகன் நான். 2007ல் கற்றது தமிழ் படத்தை கல்லூரி காலம் என்பதால் விடுதி நண்பர்களை அழைத்துக் கொண்டு ஒரு பெரிய குழுக்களாக சென்று பார்த்தோம் அதில் இருபதில் 90 சதவித நண்பர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்த அதை மிகவும் ரசித்த 10 சதவிதத்தில் நானும் என் நண்பனும் தான். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னை ஒரு வாரம் வச்சு செய்த கதையெல்லாம் உண்டு ஆனால் நானும் என் நண்பனும் அதை பெரிய பொறுட்டாக கொள்ளாமல் கற்றது தமிழ் நாங்கள் ரசிப்பதற்கான படைப்பு என்றே எடுத்துக் கொண்டோம். இதே படத்தை இன்றோ உலக சினிமாக்களின் வரிசையில் கொண்டாடுவதை பார்க்கையில் வசைப்பாடிய நண்பர்களை நினைத்து சிறு புன்னகையோடு நகர்ந்து விடுவதுண்டு.
தரமணியை கற்றது தமிழ் போன்று பத்து வருடங்கள் கழித்து கொண்டாடி விடுவார்களோ என்ற அதீத பயம் இருந்தது ஆனால் அப்படி ஏதும் நடந்துவிடவில்லை. சந்து, பொந்துகளையும் விட்டுவிடாமல் தரமணியை கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். நானும் முதல் நாளே ரசிக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தாலும் பெங்களூரில் ஒரு வாரம் கழித்தே திரையிடப்பட்டது. நான் தமிழ் சினிமாவில் அதிகம் ரசிக்கும் இயக்குனர்களான பாலசந்தர், பாலு மகேந்திரா, பாலா மற்றும் செல்வராகவன் இதில் பாலா பாணியில் நாயகனையும் செல்வராகவன் பாணியில் நாயகியையும் ஒரு சேர இந்த தரமணியில் ரசிக்கும்படி தந்திருக்கிறார் இயக்குனா் ராம். சென்னையையும், சமுகத்தையும் தன் குரலில் வசைப்பாடுவதில் ஆரம்பித்து ஆண்ட்ரியா, அழகம் பெருமாள், அஞ்சலி, வசந்த் ரவி என விட்டுவிடமால் கமிஷ்னர் மற்றும் அவரது மனைவி கதாபாத்திரங்களையும் அட்டகாசமாக தந்திருக்கிறார் ராம். எல்லோரையும் போன்று படத்தை ரசித்துவிட்டு பெண்ணியம் பற்றிய பதிவுகள் மற்றும் சமுக நல பதிவுகள் என்று பதிவிட்டு வறிந்து கட்டிக்கொள்ளாமல், இருக்கும் இடம் தெரியாமல் படத்தை ரசித்துவிட்டு சின்னதாக ஒரு விமர்சனத்தை பதிவிடுவதே எழுத்தின் எதிர்காலத்திற்கு நல்லதென தோன்றுகிறது. ஒவ்வொரும் அவர்களின் பங்கிற்கு கருத்துகளையும், வசனங்களையும் பதிவிடுகிறேன் என்ற எண்ணத்தில் படத்தின் மொத்த கதையையும் வசனங்களையும் உளறி வைத்திருப்பர் என்பதை மனதில் கொண்டு தரமணியை கண்டிப்பாக அடல்ட் மட்டும் இப்போதைக்கு ரசிப்பது நல்லது என்பதை கூறிக்கொள்கிறேன் அடல்ட் இல்லையென்றால் பொறுத்திருந்து சில வருடங்கள் கழித்து பார்க்கலாம் எப்படியும் அதற்குள் சமுகத்தில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.

No comments:
Post a Comment