Monday, 29 May 2017

லென்ஸ் (இணையதள நடுநிசிகள்)

                 

                 குறைந்த பட்ஜெட்டில் தயாரான தமிழ் மொழி (மற்ற மொழி படங்களுக்கும் பொருந்தும்) படங்களை பக்கத்து மாநிலங்களில் கூட திரையிடப்படுவது வழக்கத்தில் இல்லாத ஒன்று. இப்படியான பட்ஜெட் படங்களையெல்லாம் பக்கத்து மாநிலத்தில் உள்ள ரசிகர்கள் இணையத்தில் தவிர வேறு எப்படியும் பாா்க்க முடியாது, பெங்களூரில் வசித்துக் கொண்டிருப்பதால் எனக்கும் இந்த கா்மா பொருந்தும். இத்தகைய கா்மாவை ஒன்றிரண்டு ஆண்டுகள் இல்லாமல் 8 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறேன். இப்படித்தான் நல்ல படங்களை திரையிடாமல் என் சாபங்களை வாங்கிக் கொண்டிருங்கின்றது இந்த பூங்கா நகரம். இத்தகைய சூழலில் திருட்டு விசிடி கை கொடுத்தாலும் தரமான படங்களை இணையத்தில் பார்ப்பதை தவிா்த்து விட்டு பெங்களூரில் இருந்து சராசரியாக 45 கிமீ தூரத்தில் உள்ள ஒசூர் சென்று பாா்ப்பது வழக்கம். கடந்த 8 வருடங்களில் சுமார் ஆறு படங்கள் இப்படி ஒசூர் சென்று பாா்ததுண்டு. சரியாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த கா்மா லென்ஸ் படத்தின் மூலமாக மீண்டும் என்னை துரத்தியது, படத்தின் விமர்சனங்கள் என்னை எப்படியும் படத்தை பார்த்தே ஆக வேண்டும் என்று உசுப்பேற்றியது. சாக்கடையில் தொலைத்த காசைத் தேடும் கையைப் போல இணையத்தில் துழாவினேன் இந்த நகரத்தில் எங்கும் வெளியிடவில்லை அதுமட்டுமில்லாமல் ஒசூரிலும் படம் வெளியாகவில்லை எனத் தெரிந்த பின்பு பல மணி நேரத்திற்க்குப் பிறகு போராட்டம் முடிவுக்கு வந்தது. ஏதோ ஒரு காரணமாக கிருஷ்ணகிரி போக வேண்டிய கட்டாயத்தில் இருந்ததால் உடனே பயணித்து எனது வேலையையும் முடித்த பிறகு லென்ஸ் திரைப்படம் ஒடிக் கொண்டிருந்த தியேட்டருக்கு சென்றடைந்தேன். படம் ஆரம்பிக்க 10 நிமிடங்களே இருந்த தருணத்தில் கூட்டத்தில் இருந்த எண்ணிக்கை 10 பேர் இருந்திருக்க கூடும் இத்தனைக்கும் வெளியாகிய மூன்றாவது நாள் (ஞாயிற்றுக் கிழமை வேறு), நல்ல படங்களை நாம் எப்போதும் ஆதரித்ததில்லை இனியும் ஆதரிக்கப்போவதில்லை என்பதை அங்கு வந்திருந்த கூட்டத்தை வைத்துத் தெரிந்துக்கொண்டேன்.


                  படம் ஆரம்பித்த நிலையில் இந்த 10 என்ற எண்ணிக்கை 20 இல்லை முப்பதை அடைந்திருக்கும். வெற்றிமாறன் தயாரிப்பும், படத்தின் போஸ்டரும் பெரும் தான் எதிர்பாா்ப்பை ஏற்படுத்தியது. அடுத்தவர்களின் அந்தரங்கத்தை அனுமதியின்றி படம்பிடித்து அதை இன்டெர்நெட்டில் பரப்புவதாலும் அதனால் ஏற்படும் அவமானங்களால் உயிரை மாய்ப்பதே படத்தின் கதை. ஆரம்பமே முகம் சுளிக்க வைத்தாலும் படத்திற்கான முக்கிய காட்சி என்பதாலும் தவிர்க்க வேண்டாம். படத்தின் ஆரம்பத்தில் தொடரும் பயம் க்ளைமெக்ஸ் வரை துளியும் குறையாமல் அப்படியே நீள்கிறது. இடையில் இரண்டு மூன்று ஜோடிகள் படத்தின் பாதிப்பால் பாதியிலேயே ஜூட் விட்டன. இந்த கதையின் சம்பவங்கள் அவ்வபொழுது செய்திகளாக காதில் விழுந்திருந்தாலும் காட்சிகளாக்கிய விதம் பயத்தின் உச்சம். இன்றைய பெரும் பொழுதுப்போக்கான இன்டெர்நெட்டின் நடுநிசிகளை அப்பட்டமாக படம் பிடித்திருக்கிறது இந்த லென்ஸ். அடுத்தவர்களின் வலிகளால் இன்பம் அடையும் மனிதர்கள் மிருகத்தின் சாயல் என்பார்கள் அதுதான் இந்த படத்தின் மைய கருவும் கூட, இப்படியான கதைகளத்தை இயல்பாக காட்டியது ஒருபுறம் என்றாலும் படத்தின் காட்சிகள் ஒருவித கசப்பான அனுபவத்தை தருகிறது. லென்ஸ் கண்டிப்பாக குடும்ப படமா என்றால் ஆம் இது இரு குடும்பங்களின் பிரச்சனயை சொல்லும் படம் ஆனால் குடும்பமாக பார்க்க வேண்டிய படமா என்றால் குடும்பத்தில் உள்ள முக்கியமாக வளரும் பருவத்தினர் எல்லோரும் கண்டிப்பாக தனித்தனியாக பாா்க்க வேண்டிய படம்.


- பாஸ்கி.

Monday, 22 May 2017

மாயநதி



                       பரபரப்பிற்க்கு பஞ்சமில்லாத தமிழகத்தில் இன்றைய பரபரப்பான செய்தி என்பது தலைவர் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா?. அரசியல் வராமல் அரசியல் செய்வது தான் இவரோட ஸ்பெஷாலிட்டியும் கூட, இதில் என்ன விஷேசமென்றால் இந்த எதிா்பாா்ப்பு இன்றோ நேற்றோ ஆரம்பித்தில்லை கடந்த 20 வருடங்களாகவே அரசியலுக்கு வருவாரா இல்லையாயென்று மக்கள் எதிா்பாா்த்துக் கொண்டுதான் உள்ளனர் இதே எதிா்பாா்ப்பு இன்னும் வருட கணக்கில் தொடா்ந்தாலும் ஆச்சாியமில்லை. தலைவரும் வடிவேலு காமெடியில் வருவதைப் போல வருவேன் ஆனா வரமாட்டேன்னு தொடா்ந்து மக்களை இல்லையில்லை அவரது ரசிகா்களை எதிா்பாா்ப்பின் உச்சத்தில் கொண்டு செல்கிறாா். அரசியலில் நுழைவதற்கான முதல் படியாகத்தான் கடந்த வாரம் நடந்த ரசிகா்களுடனான போட்டோ சந்திப்பு இருக்குமென பச்சி சொல்கிறது.


                     மாவட்ட வாாியாக குறிப்பிட்ட ஆட்களை தோ்ந்தேடுத்து செல்ஃபி எடுத்தாயிற்று இதில் முதல் ஊழல் என்பது ரசிகா்களை விட ரசிகா் அல்லாதோா் தான் அதிகம். இதில் உண்மையான ரசிகா்கள் யாரென்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம். காலங்காலமாக ரசிகன் என்ற போா்வையில் அடிமைகளாய் இருப்பவர்கள் அவர்களுக்குள்ளே புலப்புவதும், கண் துடைப்புக்குமானக் காரணம் என்னவென்றால் போட்டோவிற்க்கு போஸ் கொடுத்த பாா்ட்டிகளை யாரென்றே அறியாதது தான், இந்த போட்டோ சூட் வைத்த காரணமே மாவட்ட வாாியான பதவிகளுக்கு போட்டோ ஆசாமிகளை தயார் செய்ய தான் என்று வருங்கால பதவியை பறிக்கொடுத்த ரசிகா்களின் கருத்தாக உள்ளது. மாநிலம் தலைவரின் குடிமியை பிடித்து நான்றாக ஆட்டிக் கொண்டிருக்க பத்தா குறைக்கு அடுத்து தமிழகத்தை உம்மை தவிர வேறு யாராலும் ஆள முடியாதென அவரது சகுனிகள் அவரை நம்ப வைத்துக் கொண்டிருக்கின்றனர். இடைத்தோ்தலில் திடிா் அரசியல்வாதிகள் முளைத்து தலைவரிடம் ஆசிா்வாதம் வாங்கியதில் க்ளிக் ஆயிற்று அடுத்த ஆடு கண்டிப்பாக தலைவர்தான் என்று. இதெல்லாம் ஒருப்பக்கம் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தாலும் அடுத்த பக்கம் தலைவரை அடுத்த காமராஜர் மற்றும் அண்ணா என்று அவரது ரசிகா்களின் கூப்பாடுகளை கேட்கையில் வயிறு ஜெலுசிலை தேடுகிறது. எது எப்படியோ அரசியலுக்கு வந்துட்டா அவரோட படத்துல வா்ர மாதிரி தன்னலத்தையும் உற்றாா் நலத்தையும் பொறுட்படுத்தாமல் மக்களின் நலத்திற்காக மட்டுமே பாடுபடுவாரோனு தோணுது, இந்த மாயநதி அரசியலில் பாயுமோ இல்லையோ எல்லாம் அந்த பாபாவிற்கே வெளிச்சம்.

- பாஸ்கி.

Friday, 12 May 2017

நியூஸ் கபே - 3



                    தல நடித்த விவேகம் படத்தின் டீசா் வெளியாகும் என பெரும் எதிா்ப்பாா்ப்பில் இருந்த தருணம் இரவு காத்திருந்து பாா்க்க வேண்டுமென்ற ஆா்வம் வேறு குறித்த நேரத்தில் இல்லாமல் ஒரு மணி நேரம் முன்னதாகவே வெளியிடப்பட்டன. டீசரை வைத்து பாா்க்கையில் ஒரு இன்டா்நேஷனல் குற்றவாளியை வலைப் போட்டு தேடப்படும் கதையைப் போல உள்ளது. 53 நொடிகளில் 45 நொடிகள் தல தாிசனம் தான், இன்னும் நான்கைந்து வருடத்திற்க்கு சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் மட்டுமே நடிக்கும் உாிமையை தல அளித்துவிட்டாா் என்றாலும் ரசிகா்களால் பொறுக்கொள்ள முடியும். பில்லாவில் ஆரம்பித்து கோா்வையாக மற்ற எல்லா படங்களின் டீசாிலும் வந்ததைப் போலவே இதிலும் தல குரலில் வரும் வசன உச்சாிப்பு அட்டகாசம். முந்தைய படங்களில் வரும் தலயின் சால்ட் அன்ட் பெப்பா் ஸ்டைலை விட இதில் தூக்கலாகவே உள்ளது கண்டிப்பாக இந்தியாவின் ஜாா்ஜ் க்லூனி நம்ம தல.      


                      சாதாரண சினிமா ரசிகனாய் இல்லாமல் நிறைய எதிா்பாா்ப்புடன் பாகுபலி படத்தை ரசிக்க காத்திருந்தேன். படத்தை வெளியிடும் நாளில் முதல் காட்சியாய் பாா்த்துவிட வேண்டும் என்ற ஆா்வம் இருந்தும் இரண்டு காரணத்திற்காக ஆா்வத்திற்க்கு ஓய்வு தந்துவிட்டேன் முதல் காரணம் டிக்கெட் விலை சாதாரணமாக 150 லிருந்து 300 வரை விற்கப்படும் ஆனால் பாகுபலிக்கோ 300 லிருந்து 800 வரை விற்க்கப்பட்டது. (இவ்வளவு விலை குடுத்து பிற்காலத்தில் கூட அது எப்படிப்பட்ட படமாய் இருந்தாலும் பாா்க்க மனம் வராது) இன்னொரு காரணம் கூட்டத்தால் இரண்டு வாரங்களாய் டிக்கெட் கிடைக்காமல் போனது தான். எனது அலுவலகத்தில் உள்ள நண்பா்களின் நச்சாிப்பையும், இம்சையையும் அடக்க முடியாமல் படத்தை பாா்க்க முடிவு செய்தேன் அதுவும் 250 ருபாய் டிக்கெட்டில் மட்டுமே பாா்க்க வேண்டும் என்ற கண்டிஷனோடு படத்தின் கோா்வையை மறக்க கூடாதென இரண்டாம் பாகத்தை பாா்க்கும் முன் முதல் பாகத்தை மீண்டும் ஒரு முறை பாா்த்தேன் அதனால் தான் என்னவோ முதல் பாகத்தைப் போல இரண்டாம் பாகம் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படத்தின் ஆரம்பமே இது ஒரு அக்மாா்க் தெலுங்கு டப்பிங் படம் என்பதை உணா்த்துகிறது. வசன உச்சாிப்புகள் ஒரு பக்கம் சலிப்பை ஏற்பட வைத்தாலும் காட்சிகளின் அழகு அவ்வெறுப்புகளை வலுவிழக்க செய்கின்றன. வெளியான ஒரு வாரத்தில் ஆயிரம் கோடி வசூலென்பது சாதாரண விஷயமில்லை இந்திய சினிமாவை உச்சத்தில் கொண்டு சென்றது மட்டுமில்லாமல் உலக சினிமாக்களை திரும்பிப் பாா்க்க வைத்துள்ளது. எதிா்மறை விமா்சன ஆசாமிகள் ஒரு புறமிருந்தாலும் மறுபக்கம் படத்தின் வியாபாரம் வளா்ந்துக் கொண்டேதான் போகிறது.
               

                     தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்திற்க்கு வித்திட்ட பெருமையை எப்படி ஷங்கரை சாருமோ அதைப்போல வெறும் டோலிவுட் என்றில்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமாக்களை ஓ போட வைத்த பிரம்மாண்டத்தின் பெருமை ராஜமெளலியையே சாரும். பாடல்களில் மட்டும் பிரம்மாண்டத்தை காட்டிய தா்க்கத்தை உடைத்து அதை கதைகளிலும் காட்டியதில் மிகப்பொிய பங்களிப்பை பெற்றுவிட்டாா் இந்த ராஜமௌலி என்னும் பாகுபலியின் பிரம்மா. இந்த கதைகளத்தில் குறிப்பிட்ட கதாபாத்திரம் என்றில்லாமல் அனைவரையும் அசத்த வைத்துள்ளது இவரின் இயக்கம். படத்தின் பிண்ணணி இசை அவ்வளவு அருமை You tube-ல் கீரவாணியின் ஒவ்வொரு பாடல்களையும் தேடி பிடித்து கேட்க தொடங்கிவிட்டேன் என்றால் பாருங்களேன். இந்த படத்தில் பெரிய பங்களிப்பையும், படத்தின் கதையை கச்சிதமாக கொண்டு செல்லும் பொறுப்பையும் எடுத்துக் கொண்டாா் ரம்யா கிருஷ்ணன். அனுஷ்கா, தமன்னா என இரண்டு நாயகிகள் இருந்தும் இவர் தோன்றும் இடங்களில் தான் சத்தம் காதை பிளக்கிறது நானும் இவரை அதிகம் ரசித்தேன் என்பது வேறு விஷயம். இன்னும் குறைந்தது இரண்டு வருடத்திற்காவது பாகுபலியின் சாதனைகளை பற்றி இந்திய சினிமா புகழ்பாடிக்கொண்டிருக்கும்.

- பாஸ்கி.