Monday, 21 August 2017

தரமணி



            பொதுவாகவே இயக்குனர் ராமின் படைப்புகளில் காட்சித் திணிப்பு மற்றும் ஒரு மன சமநிலையற்ற பாத்திரங்கள் இருக்கும் என தெரிந்தும் அந்த படைப்புகளை முழு மனதோடு எந்தவித வெறுப்பும் இல்லாமல் ரசிக்கும் ரசிகன் நான். 2007ல் கற்றது தமிழ் படத்தை கல்லூரி காலம் என்பதால் விடுதி நண்பர்களை அழைத்துக் கொண்டு ஒரு பெரிய குழுக்களாக சென்று பார்த்தோம் அதில் இருபதில் 90 சதவித நண்பர்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்த அதை மிகவும் ரசித்த 10 சதவிதத்தில் நானும் என் நண்பனும் தான். மற்ற நண்பர்கள் எல்லாம் என்னை ஒரு வாரம் வச்சு செய்த கதையெல்லாம் உண்டு ஆனால் நானும் என் நண்பனும் அதை பெரிய பொறுட்டாக கொள்ளாமல் கற்றது தமிழ் நாங்கள் ரசிப்பதற்கான படைப்பு என்றே எடுத்துக் கொண்டோம். இதே படத்தை இன்றோ உலக சினிமாக்களின் வரிசையில் கொண்டாடுவதை பார்க்கையில் வசைப்பாடிய நண்பர்களை நினைத்து சிறு புன்னகையோடு நகர்ந்து விடுவதுண்டு.


           தரமணியை கற்றது தமிழ் போன்று பத்து வருடங்கள் கழித்து கொண்டாடி விடுவார்களோ என்ற அதீத பயம் இருந்தது ஆனால் அப்படி ஏதும் நடந்துவிடவில்லை. சந்து, பொந்துகளையும் விட்டுவிடாமல் தரமணியை கொண்டாடி தீர்த்துவிட்டார்கள். நானும் முதல் நாளே ரசிக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தாலும் பெங்களூரில் ஒரு வாரம் கழித்தே திரையிடப்பட்டது. நான் தமிழ் சினிமாவில் அதிகம் ரசிக்கும் இயக்குனர்களான பாலசந்தர், பாலு மகேந்திரா, பாலா மற்றும் செல்வராகவன் இதில் பாலா பாணியில் நாயகனையும் செல்வராகவன் பாணியில் நாயகியையும் ஒரு சேர இந்த தரமணியில் ரசிக்கும்படி தந்திருக்கிறார் இயக்குனா் ராம். சென்னையையும், சமுகத்தையும் தன் குரலில் வசைப்பாடுவதில் ஆரம்பித்து ஆண்ட்ரியா, அழகம் பெருமாள், அஞ்சலி, வசந்த் ரவி என விட்டுவிடமால் கமிஷ்னர் மற்றும் அவரது மனைவி கதாபாத்திரங்களையும் அட்டகாசமாக தந்திருக்கிறார் ராம். எல்லோரையும் போன்று படத்தை ரசித்துவிட்டு பெண்ணியம் பற்றிய பதிவுகள் மற்றும் சமுக நல பதிவுகள் என்று பதிவிட்டு வறிந்து கட்டிக்கொள்ளாமல், இருக்கும் இடம் தெரியாமல் படத்தை ரசித்துவிட்டு சின்னதாக ஒரு விமர்சனத்தை பதிவிடுவதே எழுத்தின் எதிர்காலத்திற்கு நல்லதென தோன்றுகிறது. ஒவ்வொரும் அவர்களின் பங்கிற்கு கருத்துகளையும், வசனங்களையும் பதிவிடுகிறேன் என்ற எண்ணத்தில் படத்தின் மொத்த கதையையும் வசனங்களையும் உளறி வைத்திருப்பர் என்பதை மனதில் கொண்டு தரமணியை கண்டிப்பாக அடல்ட் மட்டும் இப்போதைக்கு ரசிப்பது நல்லது என்பதை கூறிக்கொள்கிறேன் அடல்ட் இல்லையென்றால் பொறுத்திருந்து சில வருடங்கள் கழித்து பார்க்கலாம் எப்படியும் அதற்குள் சமுகத்தில் எந்த மாற்றமும் நிகழப்போவதில்லை.

Saturday, 12 August 2017

டைம் டூ டிராவல் - மசினகுடி



மசினகுடி:
                      மேற்கு தொடர்ச்சி மலையில் ஊட்டியின் அருகில் அமைந்திருக்கும் ஒரு அற்புதமான மலைபகுதியாகவும், மனிதர்களால் சீ்ர்குலையாத (மற்ற சுற்றுலா தலங்களைப் போல் இதை இன்னும் மரணகுழியில் தள்ளவில்லை) இடமாகவும் உள்ளது இந்த மசினகுடி. ஊட்டி, கொடைக்கானல், மூணாறு என விடுமுறை நாட்களில் அதிகம் செலவு செய்தும் மக்கள் கூட்டத்தில் வேகுவதைக் காட்டிலும் குறைந்த செலவில் நிறைவாக இயற்கையையும், வன விலங்குகளையும் ரசிக்கக் கூடிய இடமாக கண்டிப்பாக இது இருக்கும்.
நீங்கள் இயற்கை விரும்பியோ இல்லை விலங்குகள் விரும்பியோ எப்படி இருப்பினும் இரண்டும் உங்கள் கண்களுக்கு மாறிமாறி விருந்தளிப்பது நிச்சயம். ஊட்டிக்கு அருகில் இருந்தாலும் மற்ற சுற்றுலா தளங்களை புறக்கணித்து மசினகுடியை மட்டுமே ரசிக்க நேரத்தை ஒதுக்கிக் கொள்வது நன்று. ஊட்டியிலிருந்தோ இல்லை பந்திப்பூர் வழியாகவோ செல்வதென்றால் சரியாக காலை 6 மணி இல்லை மாலை 5 மணிக்கு புறப்பட்டால் வழியில் யானை, காட்டெருமை, மான், மயில், கரடி போன்ற விலங்குகளை அரிதாக காண முடியும் லக் இருந்தால் சிறுத்தையும், புலியும் புலப்படும்.

மசினகுடியில் முக்கியமாக மோயாறு பள்ளதாக்கு, சிறுகூர் அருவி அதைத்சுற்றி முதுமலை, பந்திப்பூர் வனவிலங்குகள் சரணாலயம் மற்றும் கோபாலசுவாமி மலை போன்ற இடங்களை தவிர்க்க வேண்டாம். திரும்பிய பக்கமெல்லாம் காட்டிற்க்குள் அழைத்து செல்கிறோம் என காசை கறந்துவிடும் ஆசாமிகள் அதிகம் எனவே, பந்திப்பூர் மற்றும் முதுமலையை தவிர்த்து வனவிலங்குகளை ரசிக்கவேண்டும் எனில் இருநூறு, முன்னூறு ரூபாய் கொடுத்து சவாரி செய்வதை விட மசினகுடியிலிருந்து பந்திப்பூர் வழியாக பத்து கி.மீ சொந்த வாகனத்தில் பயணம் செய்தால் நிச்சயம் புதுவித அனுபவத்திற்க்கும், த்ரில் பயணத்திற்க்கும் கியாரண்டி.



சிறந்த வழித்தடம்:

பெங்களூர்-மைசூர்-பந்திபூர்-மசினகுடி

மேட்டுபாளையம்-ஊட்டி-மசினகுடி என இரண்டு வழிகள் உள்ளன.

இதில் பெங்களூர் வழியாக சென்றால் ஹைவே என்பதால் பயணத்தில் சிரமமிருக்காது ஆனால் மேல் கம்மனஹல்லியில் ஆரம்பித்து மசினகுடி வரை வெறும் இருபது கி.மீ மட்டுமே காட்டிற்குள் பயணம் செய்ய இயலும் ஆனால் விலங்குகளை இந்த பாதையில் மட்டுமே காண இயலும்.

இதுவே ஊட்டி வழியாக சென்றால் மேட்டுபாளையம் முதல் மசினகுடி வரை சுமார் என்பது கி.மீ மலைகளோடும் இயற்கையோடும் ஒருசேற பயணிக்க முடியும். ஊட்டியில் இருந்து மசினகுடிக்கு கூடலூர் மற்றும் கள்ளட்டி என இரண்டு வழியாக செல்லலாம். இதில் கள்ளட்டி வழியே என்றால் 36 மோசமான வளைவுகளை கடக்க வேண்டியிருக்கும். பத்து இருக்கைகளுக்கு மேல் உள்ள வாகனங்களில் செல்பவர்கள் இந்த பாதையை தவிர்ப்பது நல்லது. கள்ளட்டி வழியாக சென்றால் வழியில் கள்ளட்டி அருவி, பைசான் பாய்ண்ட் எனும் இரண்டு அற்புதமான இடங்களை ரசிக்கலாம்.



தங்கும் வசதி மற்றும் உணவு:

சாதாரண ஹோட்டல்களில் தங்குவதற்கு சுமார் ரூ.300 லிருந்தும், இதுவே காட்டிற்க்குள் உள்ள அறைகளிலும், மரக்கிளைகளில் கட்டபட்டுள்ள வீடுகளில் தங்கவேண்டும் எனில் 2000லிருந்து கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பீக்காக் டார்மிட்டரி, தெப்பகாடு டார்மிட்டரி எனும் தங்கும் அறைகள் குறைந்த விலையில் கிடைக்கும் தேவையெனில் சமையல்காரா்களும் குறைந்த விலைக்கு சமைத்து தருகிறார்கள்.

விடுமுறை நாட்களை குடும்பத்துடனும், நண்பர்களுடனும் குறைந்த பட்ஜெட்டில் கொண்டாடி குதுகலிக்க சிறந்த இடங்களில் ஒன்று இந்த மசினகுடி.

-பாஸ்கி.