Friday, 24 November 2017

தீரன் அதிகாரம் ஒன்று



   சதுரங்க வேட்டை என்ற அற்புதமான படைப்பை தந்தமையால் தன் இரண்டாவது படத்தின் தொடக்கத்திலேயே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டார் இயக்குனர் வினோத். சதுரங்க வேட்டையை மிஞ்சும் அளவிற்கு இந்த தீரன் இருக்கின்றதா என்றால் கண்டிப்பாக இல்லை ஆனால் நிச்சயமாக ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய படம். பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன் மற்றும் தீரன் இந்த மூன்று படங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற படங்களை தவிர்த்துவிட்டால் கார்த்தியை தமிழ் சினிமாவில் நல்ல நடிகர் என்ற பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம். விசாரணை படத்தின் மூலம் போலிஸ்களின் மீதிருந்த பெரும் கோபம் இந்த படத்தால் சற்றுக் குறைந்துள்ளது அதுவும் 2005 காலகட்டத்தில் பணியாற்றியவர்கள் மீது மட்டுமே. இன்றைய காலகட்டத்தில் இப்படிப்பட்டவர்கள் மிக குறைவுதான். தமிழ் சினிமாவிற்கு மட்டுமேயான ஒருசில வரைமுறைகளில் இந்த காதல் காட்சிகளும் நகைச்சுவைக் காட்சிகளும் ஒன்று. எப்படிப்பட்ட சீரியஸ் படமாக இருந்தாலும் அதில் கொத்தமல்லியாக இந்த காதல் காட்சிகளை திணிப்பது. இந்த படத்திலும் கொத்தமல்லியை தூவியிருக்கிறார்கள். படம் ஆரம்பித்து முதல் இருபது நிமிடங்களை மட்டும் மறந்துவிடலாம் ஏனேன்றால் கதைக்கும் இந்த இருபது நிமிடக் காட்சிகளுக்கும் எந்த தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை (இரண்டே இரண்டு காட்சிகள் மட்டுமே ரசிக்கும்படியாக உள்ளது அதுவும் ராகுல் ப்ரீத் சிங்கிற்காக).


எல்லா இயக்குனர்களும் உண்மை சம்பவங்களை எல்லோருக்கும் பிடித்தார்ப்போல் எடுப்பதில்லை. இந்த விசயத்தில் இயக்குனர் வினோத்தை கோடம்பாக்கம் கைவிடக் கூடாத முக்கியமான இயக்குனர்கள் பட்டியலில் சேர்த்துவிடுவது நல்லது. தீரன் என்ற போலிஸ் பாத்திரத்தை இவ்வளவு நேர்த்தியாக வேறு இயக்குனர்கள் யாரும் தரமுடியாத அளவிற்கு தரமாக கொடுத்திருக்கிறார். மற்ற இயக்குனர்கள் தனது போலிஸ் படைப்பை இரண்டாம் அல்லது மூன்றாம் பாகம் எடுப்பதற்க்குள் தீரனை குறைந்தது மூன்று முறையாவது பார்த்துவிட்டு படப்பிடிப்பை தொடங்கலாம். காதல், காமெடி என ஒரு முப்பது நிமிடக் காட்சிகளை குறைத்திருந்தால் கண்டிப்பாக தீரன் தமிழ்சினிமாவில் குறைந்தது ஐந்தாறு வருடங்களுக்கு பேசப்பட்டிருக்கும். இப்படியான ஒரு சில விதமான குறைகள் இருந்தாலும் அதை தூக்கியெறிந்துவிடுகிறது அந்த ஏழு காட்சிகள். திகிலும் சிலிர்ப்பும் கலந்து என்னை மிரட்டிய அந்த ஏழு காட்சிகள்.

1. போலிஸ் செலக்சன் காட்சிகள் (காட்சிகளில் இயக்குனரின் கடின உழைப்பை படம் பிடிக்கிறது நம் கண்கள்).
2. குற்றவாளியால் பாதிக்கப்பட்டவர்களை தீரன் மருத்துவமனையில் பார்க்கும் காட்சி (அதிலும் அந்த குழந்தையின் நடிப்பு அபாரம்).
3. இடைவேளைக் காட்சி.
4. கைரேகையை வைத்து குற்றவாளியை கண்டுபிடிக்கும் காட்சி (அந்த கைரேகையை தேடும் மனிதரின் நடிப்பை அவ்வளவு யதார்த்தமாக தந்திருக்கிறார் இயக்குனர்).
5.குற்றவாளியை பிடிக்க செல்லும்பொழுது ஊரே திரண்டு போலிஸ்களை தெறிக்கவிடும் காட்சி.
6.பேருந்தில் வரும் சண்டைக்காட்சி.
7.படத்தின் இறுதிக்காட்சி.


இதுபோன்ற காட்சிகள் படத்தின் மற்ற குறைகளை சமன்செய்துவிடுகிறது.


-பாஸ்கி.


No comments: