Monday, 10 April 2017

மணல் மாஃபியா

அன்பு உள்ளங்களுக்கு,

                     கடந்த வாரம் ஒரு அலுவலகப் பயணம் மேற்க்கொள்ள வேண்டிய கட்டாயம். பயணம் செய்த வழியில் ஒரு சில ஆறுகளை கடந்து செல்ல அந்த ஆறுகளை கடக்கையில் பாலைவனத்தையும், மயானத்தையும் கடப்பதுப் போல ஓர் உணா்வை தந்தது. தமிழகத்தில் இன்றைக்கு பல ஆறுகளின் நிலையும் இதுதான். ஆறுகளின் இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்றால் அது மணல் கொள்ளை இதனால் பாதிப்பு என்பது குறிப்பிட்ட மக்களுக்கென்று இல்லாமல் நம் எல்லோா்க்கும் தான். மணல் கொள்ளையைக்கண்டு சாதாரண மக்களும், தன்னாா்வலா்களும் கலங்குவதை கண்கூடாக பாா்க்க முடிகிறது. பொதுவாக எல்லா ஆறுகளிலும் அரசாங்கம் அளித்த குறிப்பிட்ட அளவு அனுமதியை மீறி தன் விருப்பத்திற்க்கு மண்ணை அள்ளும் துரோகிகள் ஏராளம், இதை தடுக்க முடியாமல் சமுக ஆா்வலா்களும், சமுகத்தின் மீது அக்கறை உள்ள ஒவ்வொருவரும் வெம்பிக் கொண்டிருக்கின்றனா். நீதி, நோ்மை, நியாயங்களை புத்தகத்தில் மட்டும் படித்துவிட்டு நடைமுறையில் அது அத்தனையும் கோட்டைவிட்டு நிற்கிறோம். இந்த மணல் கொள்ளையின் மாற்றங்களை எத்தகைய அரசு அதிகாாிகள் மற்றும் அரசியல் ஜீவிகள் வந்தாலும் இந்த நிலையில் மாற்றதை துளியும் எதிா்பாா்க்க முடியாது என்பதை மட்டும் ஆணித்தனமாக சொல்லமுடியும். இந்த மணல் கொள்ளையா்களை தூணாக தாங்கியிருப்பதே இப்படிப்பட்ட அதிகார புள்ளிகள் தான். இந்த சட்ட விரோதத்தை சிறு உறுப்பினாிலிருந்து பொிய அதிகாரிகள் வரை எல்லோருடைய ஆதரவில் தான் இவ்வளவு சாதரணமாக அவா்களால் தவறை சாியாக செய்ய முடிகிறது. இத்தகைய மணல் கொள்ளையை தனித்து எதிா்ப்பதேன்பது நினைக்கவும் முடியாத காாியம். தனி ஒருவனாக எதிா்த்த மக்களுக்கும், ஆா்வலர்களுக்கும் கிடைத்த பரிசோ மிரட்டலும், வெட்டுகளும் மட்டுமே. இந்த மணல் கொள்ளையால் வரும் பாதிப்பை காணும் நாட்கள் வெகு தூரமில்லை. இத்தகைய சட்டவிரோதத்திற்கு காரணிகள் வேறுயாராக இருக்க முடியும் இதை கண்டுகொள்ளாத மக்களும், பயமில்லாமல் கொள்ளையா்களை ஆதாிக்கும் அதிகாாிகளும், அரசியல் புள்ளிகளும் மட்டுமே.


                    அரசியல் வாழ்வி்ல் பெரும் துருவங்களாக காட்டிக்கொள்ளும் எல்லாக் கட்சிகளும் இந்த மணல் கொள்ளை விஷயத்தில் மட்டும் மெகா கூட்டணியை அமைத்துக் கொள்கிறது. அண்டை மாநிலங்களில் இப்படியான பாதிப்புகள் ஏதுமில்லை என்பதால் வற்றாத ஆறுகளை சுலபமாக காணமுடிகிறது. நம்முடைய வாழ்வாதாரத்தை கொலை செய்து குற்றவாளியாக அலைந்துக் கொண்டிருக்கும் நாம் இதையெல்லாம் காப்பாற்றாமல் வேறு எதை சாதிக்க அலைந்துக் கொண்டிருக்கின்றோம் என்பது ஒவ்வொாின் மனசாட்சிகளுக்கு மட்டுமே வெளிச்சம். இயற்கை தந்த பெரும் சொத்தான மணலை கொள்ளை அடிக்கும் அயோக்கியா்களை தட்டிக் கேட்டால் புது புது காளான் முளைத்துக் கொண்டே இருக்கும். இதற்கு பெரும் துணையாக உள்ள அதிகார வா்க்கங்களின் கதவை தான் ஓங்கி தட்ட வேண்டும். தைாியத்தை தைாியமாக வெளிப்படுத்துவதால் மட்டுமே மாற்றத்தை உணரமுடியும்.


                     நம்முடைய அடையாளத்தை காப்பாற்ற திரண்ட இலட்சங்களில் கொஞ்ச நஞ்சம் கூட இதற்காக குரல் எழுப்புவதில்லை என்றாலும் இந்த மணல் கொள்ளை செயல்களைப் பற்றி ஒரு சின்ன பதிவையும் தன் பக்கங்களில் நிரப்புவதற்கு நேரமில்லாத மனிதா்களை பாா்த்தால், அவா்களுக்கு எத்தகைய ஆவல் இந்த சமுகத்தின் மீது உள்ளதென்பதை தெளிவாக காட்டுகிறது. வெறும் மணல் கொள்ளையை மட்டும் கடந்து செல்லவில்லை இதைப் போன்ற எத்தனையோ சட்டவிரோதங்களை கண்டும் காணாமல் இயற்கையை நிா்வாணப்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.


- பாஸ்கி.

No comments: